நீட் தேர்வு முறையில் வருகிறது மாற்றம்: விரைவில் அறிவிக்கிறது மத்திய அரசு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, December 18, 2024

நீட் தேர்வு முறையில் வருகிறது மாற்றம்: விரைவில் அறிவிக்கிறது மத்திய அரசு


இளநிலை, நீட் நுழைவுத் தேர்வை பேனா - பேப்பர் முறையில் நடத்துவதா அல்லது, ஆன்லைன் தேர்வாக நடத்துவதா என்பது குறித்து கல்வி அமைச்சகமும், சுகாதாரத்துறையும் ஆலோசித்து வருவதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டு

எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான, நீட் எனப்படும், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை இந்த தேர்வுகளை நடத்துகிறது. நாட்டின் மிகப் பெரிய நுழைவுத்தேர்வாக கருதப்படும் இளநிலை நீட் தேர்வை, நடப்பாண்டில் 24 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வு, பேனா - பேப்பர் முறையில் தற்போது நடத்தப்படுகிறது.

இந்தாண்டு நடந்த தேர்வின் போது, வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக சர்ச்சை எழுந்தது. மேலும், தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது, என்.டி.ஏ.,வுக்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, என்.டி.ஏ., நடத்தும் தேர்வுகள் நேர்மையாகவும், வெளிப்படை தன்மையுடனும் நடத்தப்படுவதை உறுதி செய்ய, இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.

நுழைவுத் தேர்வு நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்த இக்குழு, பல்வேறு சீர்திருத்தங்களை பரிந்துரைத்து மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. அவர்கள் அளித்துள்ள சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இரண்டு சுற்று பேச்சு
இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று கூறியதாவது:

இளநிலை நீட் தேர்வுகளை பேனா - பேப்பர் முறையில் நடத்துவதா அல்லது ஆன்லைன் வாயிலாக நடத்துவதா என்பது குறித்து தேர்வுகளை நிர்வகிக்கும் மத்திய சுகாதாரத்துறையுடன் விவாதித்து வருகிறோம். இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா உடன் இரண்டு சுற்று பேச்சு நடத்தப்பட்டு உள்ளது. விரைவில் இறுதி முடிவு அறிவிக்கப்பட்டு, 2025 தேர்வில் சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உயர் படிப்புகளுக்கான தேர்வுகளை மட்டுமே என்.டி.ஏ., நடத்தும்

நீட் தேர்வு மட்டுமின்றி, முனைவர் படிப்புக்கான நெட் நுழைவுத் தேர்வு உட்பட அரசுப் பணிகளில் சேருவதற்கான பல்வேறு நுழைவுத் தேர்வுகளையும் என்.டி.ஏ., நடத்துகிறது. ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், சில முக்கிய முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது. அதன்படி, 2025 முதல், உயர் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை மட்டும் இனி என்.டி.ஏ., நடத்தும் என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று அறிவித்தார்.
மேலும், தேர்வுகளின் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக என்.டி.ஏ., செயல்பாட்டில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், புதிதாக 10 புதிய பணியிடங்கள் இதற்காக உருவாக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
9 - பிளஸ் 2வுக்கு புதிய புத்தகம்

சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளுக்கான பாட புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரித்து அச்சிட்டு வருகிறது. ஆண்டுதோறும் 5 கோடி பாட புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி., அச்சிடுகிறது. இதை அடுத்த ஆண்டு முதல் 15 கோடியாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.குறைந்த விலைக்கு தரமான புத்தகங்களை மாணவர்களுக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 9 - பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பாட புத்தகங்கள் 2026 - 27 கல்வியாண்டு முதல் விற்பனைக்கு வர உள்ளன. இந்த தகவலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று உறுதி செய்தார்.

Post Top Ad