தேர்வு நேரத்தில் ஆன்லைன் பயிற்சி? - ஆசிரியர்கள் புலம்பல் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, December 16, 2024

தேர்வு நேரத்தில் ஆன்லைன் பயிற்சி? - ஆசிரியர்கள் புலம்பல்



தமிழகத்தில் இன்று துவக்கப்பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு துவங்கும் நிலையில் மாற்றுத்திறன் மாணவர்களின் கல்வி குறித்த பயிற்சி ஆன்லைனில் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வா, பயிற்சியா என்ற குழப்பமான சூழலில் ஆசிரியர்கள் பரிதவிக்கின்றனர்.

தமிழகத்தில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் மூலம் மாற்றுத்திறன் குழந்தைகள் கல்வியை ஆசிரியர்கள் மத்தியிலும் மேம்படுத்தும் நோக்கில் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, துவக்கபள்ளி ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016, 21 வகையான குறைபாடுகள் பற்றிய முன்னோட்டம், உடல், உணர்திறன், அறிவு சார் குறைபாடுகள் உள்ளிட்ட 7 பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.

முன் திறனறி மதிப்பீடு தேர்வு, பயிற்சி காணொலி, கையேடு, பின் திறனறி மதிப்பீடு தேர்வு ஆகியவை காணொலி மூலம் நடக்கிறது. அனைத்து ஆசிரியர்களையும் பயிற்சியில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அனைத்து வகுப்புகளுக்கும் அரையாண்டு தேர்வுகள் நடந்து வருகின்றன. குறிப்பாக துவக்கப்பள்ளிகளுக்கு இன்று(டிச. 16) தான் தேர்வுகள் துவங்குகின்றன.இந்த பயிற்சியை ஆன்லைனில் இல்லாமல் நேரடியாக வழங்கவும், தேர்வு நேரத்தில் வேண்டாம் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் வைரமுத்து கூறியதாவது:

எங்களுக்கு இந்த பயிற்சி ஆன்லைனில் கொடுத்து உடனடியாக மதிப்பீடு தேர்வு வைத்து பதில் கொடுக்க நிர்பந்திக்கின்றனர். அரையாண்டு தேர்வு வைப்பதா இல்லை ஆன்லைன் டெஸ்டில் உட்காருவதா என தெரியவில்லை. சிறப்பு ஆசிரியருக்கு உள்ள கற்றல் தெளிவு எங்களுக்கும் வேண்டும் என்றால் நேரடியாக பயிற்சி அளித்தால் உதவியாக இருக்கும். காணொலி மூலம் தருவது பயனற்றது.

இவ்வாறு கூறினார்.


Post Top Ad