குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் பெற்றோர் ஒப்பிடக்கூடாது. ஒவ்வொருவருக்கும்
உள்ள தனித்திறமையை கண்டறிந்து வளர்த்தெடுக்கும் பொறுப்பு பெற்றோருக்கும்,
ஆசிரியர்களுக்கும் உள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ்
கூறினார்.
திருப்பூர் அருகே அய்யன்காளிபாளையம் வி.கே., அரசு மேல் நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை திறப்பு, விளையாட்டு மைதான கட்டமைப்பு - முன்னாள் எம்.எல்.ஏ., துரைசாமி கலையரங்கம் அடிக்கல் நாட்டுதல், பள்ளி வளர்ச்சி குழு, நன்கொடையாளர்கள் கவுரவித்தல் மற்றும் பள்ளியின், 60ம் ஆண்டு நிறைவு விழா, ஆகிய ஐம்பெரும் விழா நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். சி.இ.ஓ., உதயகுமார் வரவேற்றார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பேசியதாவது:
குழந்தைகளுக்காக ஸ்மார்ட் கிளாஸ், ஹைடெக் கிளாஸ், சிஸ்டம் லேப் உட்பட பள்ளிக்கு, 67 திட்டங்களை அரசு கொண்டு வந்துள்ளது. அதேபோல், விளையாட்டு என்றால், துணை முதல்வர் உதயநிதி முன்னெடுப்புடன், விளையாட்டு போட்டிகளுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு தனித்திறமை உண்டு. அதனை கண்டுபிடித்து வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உண்டு. பெற்றோர் மற்ற குழந்தையுடன் தங்களுடைய குழந்தைகளை ஒப்பிட வேண்டாம். குழந்தைகளிடம் மனரீதியாக அழுத்தத்தை உருவாக்க வேண்டாம். அரசு பள்ளிகளில், அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு நாற்காலியை உருவாக்கித் தர வேண்டும். என முதல்வர் நினைக்கிறார். இந்தியாவில் கல்வித் தர வரிசையில் இரண்டாம் இடத்தை எட்டி உள்ளோம்.
பொது தேர்வில் திருப்பூர் மாவட்டம் சிறப்பிடம் பெற்று வருகிறது. அதனை இம்முறையும் சாதித்து காட்டுவர் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ் குமார், நன்கொடையாளர் எவரெடி குரூப்ஸ் நிறுவனர் சுப்பிரமணியம், பள்ளி வளர்ச்சி குழு மற்றும் பி.டி.ஏ., நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.