தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் (ஹைடெக் லேப்) அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கற்றல், கற்பித்தல் பணிக்காக 10 முதல் 20 கணினிகள் மற்றும் புரொஜெக்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. அவை ஒருங்கிணைந்த பிராட்பேண்ட் இணைய சேவை மூலம் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த சேவையில் இணைய வேகம் குறைவாக இருந்ததால் ஆய்வகங்களின் பயன்பாடும் குறைந்தது. இதை சரிசெய்ய அரசுப் பள்ளிகளில் 100 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணையச் சேவையை அதிகபட்சம் ரூ.1,500 கட்டணத்துக்குள் அமைத்து கொள்வதற்கு பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியது.
இதையடுத்து 3,700 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பிஎஸ்என்எல் நிறுவனம் வாயிலாக பிராட்பேண்ட் இணையதள சேவை ஏற்படுத்தப்பட்டது. அதன்பின்னர் கணினி ஆய்வகங்களில் இணையதள வேகம் சீராக இருந்து வருகிறது. இதற்கிடையே பிராட்பேண்ட் கட்டணத்தை பல்வேறு பள்ளிகள் முறையாக செலுத்தாமல் இருப்பதாகவும், அந்தவகையில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு இதுவரை ரூ.1.5 கோடி நிலுவை வைக்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் பிராட்பேண்ட் சேவை நிலுவைக் கட்டணத்தை பள்ளிகள் உடனடியாக செலுத்த வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், “அரசு உயர்நிலை, மேல்லைப் பள்ளிகளின் உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களில் உள்ள பிராட்பேண்ட் சேவைக்கான நிதியானது சமக்ர சிக்க்ஷா திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
ஆனால், இதற்கான சேவை கட்டணம் ரூ. 1.5 கோடி நிலுவையில் உள்ளதாகவும் , அதை உடனே கட்டவில்லை எனில் சேவை துண்டிக்கப்படும் எனவும் பிஎஸ்என்எல் நிறுவனம் கடிதம் மூலமாக தெரிவித்துள்ளது. எனவே , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உடனே தொகையை செலுத்த அறிவுரைகள் வழங்க வேண்டும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.