IIT களில் சேரும் தமிழக மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு; அமைச்சர் மகேஷ்

தமிழக அரசின், நான் முதல்வன், புதுமைப் பெண் போன்ற திட்டங்களால், பிரீமியம் இன்ஸ்டிடியூஷன் எனப்படும், ஐ.ஐ.டி., உள்ளிட்ட புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேரும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு, 70ல் இருந்து 552 ஆக தற்போது அதிகரித்துள்ளது, என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.

சி.ஐ.ஐ., எனப்படும், இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்மண்டல கல்விப்பிரிவு சார்பில், இந்திய சூழலுக்கான, 21ம் நுாற்றாண்டு திறன்களை கொண்ட மாணவர்களை மேம்படுத்துதல் தலைப்பில், சென்னையில் நேற்று பள்ளிக்கல்வி மாநாடு நடந்தது; 200 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டில், அமைச்சர் மகேஷ் பேசியதாவது:

அறிவை துாண்டும் வேலையை ஆசிரியர்கள் செய்கின்றனர். உலக அறிவுக்கு ஆங்கிலம் அவசியம். தமிழக பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கற்பிக்க, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பள்ளியில் படிக்கும் போதே மாணவர்கள், கல்லுாரி அனுபவத்தை தெரிந்து கொள்வதற்காக, பிளஸ் 1 மாணவர்கள் அவர்கள் விரும்பும் கல்லுாரிகளுக்கு அரசு சார்பில் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இதனால், உயர்கல்வி பயில்வதற்கான ஆர்வம் துாண்டப்படுகிறது. இதுவரை, ஒரு லட்சம் மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டு உள்ளனர். பள்ளிப்படிப்பை முடித்ததும், உயர்கல்வி பயில வேண்டும்.

பள்ளிப்படிப்பை முடித்ததும், குழந்தைகள் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் பெற்றோருக்கு வரக்கூடாது; மாணவர்களுக்கும் அந்த எண்ணம் வரக்கூடாது.

நான் முதல்வன், புதுமைப்பெண், மாதிரி பள்ளி போன்ற, தமிழக அரசின் திட்டங்களால், பிரீமியம் இன்ஸ்டிடியூஷன் எனப்படும் ஐ.ஐ.டி., போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு, 70ல் இருந்து 552 ஆக தற்போது அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

சி.ஐ.ஐ., தென்மண்டல கல்வி மற்றும் தொழில் நிறுவன இணைப்பு குழு தலைவர் ஜி.வி.செல்வம் பேசும் போது, செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ் என, நவீன தொழில்நுட்பம் தொடர்பான பாடத்திட்டங்களை, பள்ளிகளிலேயே படிக்க வாய்ப்பு இருந்தால், அவற்றை கல்லுாரியில் படிக்க மிக எளிதாக இருக்கும்.

எனவே, தொழிற்சாலைகளின் தேவைக்கு ஏற்ப, பள்ளிகளில் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும், என்றார்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive