அரசு பள்ளிகளில் கல்வி முறையை மேம்படுத்தவும், கண்காணிக்கவும் அந்தந்த சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் தலைமையில் குழுவை அமைக்கும் அரசின் முடிவுக்கு பல கல்வியாளர்கள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் அரசு பள்ளிகளில், நாளுக்கு நாள் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.
இதை சரி செய்ய, அரசு பள்ளிகள் உள்ள சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் தலைமையில் குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது' என்று துவக்க கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்திருந்தார்.
இதற்கு பல்வேறு அமைப்புகள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, நேஷனல் சட்டப்பள்ளி இந்திய பல்கலைக்கழகத்தில் உலகளாவிய கல்வி திட்ட தலைவரான நிரஞ்சனாராத்யா கூறியதாவது:
பள்ளிகளை கண்காணிக்க, எம்.எல்.ஏ.,க்கள் தலைமையில் குழு அமைப்பது சட்ட விரோதமானது. இது கல்விக்கான அடிப்படை உரிமையை அமல்படுத்த உருவாக்கப்பட்ட கல்வி உரிமை சட்டத்தை மீறுவதாகும்.
கல்வி உரிமை சட்டப்படி, பள்ளிகளின் மேம்பாடு, மேற்பார்வைக்காக பள்ளி அளவில், பள்ளி வளர்ச்சி - கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கள், சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் உருவாக்கப்பட்ட கல்வி உரிமை சட்டத்தை, பலவீனப்படுத்த அரசு முயற்சிக்கிறது. எம்.எல்.ஏ.,க்கள் குழு அமைக்காமல், கல்வி உரிமை சட்டத்தை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் கல்வியை அரசு, அரசியலாக்க பார்க்கிறது. பள்ளிகள், அரசியல் தளங்களாக மாறுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.