PGTRB Chemistry Syllabus மாற்றியமைக்க மனு! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, December 18, 2024

PGTRB Chemistry Syllabus மாற்றியமைக்க மனு!


 
முதுகலை ஆசிரியர்களுக்கான, டி.ஆர்.பி., தேர்வில், வேதியியில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு மனு அனுப்பி உள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மூலம், அரசு மேல்நிலை பள்ளிகளில், 50 சதவீதம் முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வின் மூலமாகவும், மீதமுள்ள, 50 சதவீதம் முதுகலை ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், நேரடி போட்டித்தேர்வின் மூலமும் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுகிறது.

இதில், 2000ம் ஆண்டு வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் தான், 2022ம் ஆண்டு வரை முதுகலை ஆசிரியர் நேரடி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், நடப்பாண்டு முதல், முதுகலை ஆசிரியர் தேர்வு புதிய பாடத்திட்டப்படி நடத்தப்படும் என, செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, புதிய பாடத்திட்டங்கள் தமிழக அரசிதழில், ஒரு மாதத்திற்கு முன் வெளியிடப்பட்டது. இப்பாடத்திட்டத்தில், வேதியியல் நீங்கலாக பிற பாடங்களுக்கு சிறிதளவு மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டிருந்தன. ஆனால், வேதியியல் பாடத்திற்கு மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கு தேர்வு செய்யப்படும் வேதியியல் பாட முதுகலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்டத்தை விட 30 முதல் 50 சதவீதம் வரை பாடத்திட்டம் மிக அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடம் எடுப்பதற்கு இவ்வளவு கடினமான பாடத்திட்டத்தை கொடுத்திருப்பதன் மூலம், போட்டித் தேர்வு எழுத உள்ள தேர்வர்கள் மிகப்பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், நீட், ஜே.இ.இ., போன்ற போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எழுத தயார்படுத்தும் வகையில், அதனை ஒத்த பாடத்திட்டமாக இதை மாற்றி அமைக்க வேண்டும்.

இந்த விசயத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரடியாக தலையிட்டு, வேதியியல் பாடத்திற்கான புதிய பாடத்திட்டத்தை மறு சீராய்வு செய்ய குழு அமைத்து, திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை விரைவில் வெளியிட உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post Top Ad