மார்ச் 13 முதல் 31 வரை முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு

1345684

மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான க்யூட் நுழைவுத் தேர்வு மார்ச் 13 முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக என்டிஏ அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை(என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி அடுத்த கல்வியாண்டில் (2025-26) முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு கணினி வழியில் வரும் மார்ச் 13 முதல் 31-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரிகள் https://exams.nta.ac.in/CUET-PG/ என்ற இணையதளம் வழியாக பிப்ரவரி 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் செலுத்த பிப்ரவரி 2-ம் தேதி கடைசி நாளாகும். மேலும், விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள பிப்ரவரி 3 முதல் 5-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும். தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு, விண்ணப்பக் கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை /www.nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இதுதவிர விண்ணப்பிப்பதில் ஏதும் சிரமங்கள் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது helpdesk-cuetpg@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியே தொடர்பு கொள்ளலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) பரிந்துரையின்படி க்யூட் நுழைவுத் தேர்வில் நடப்பாண்டு முதல் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive