இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக அவ்வப்போது ‘ஸ்லாஸ்’ எனும் மாநில கற்றல் அடைவுத் திறன் தோ்வு நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி நிகழாண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8-ம் வகுப்பு பயிலும் 15.78 லட்சம் மாணவா்களுக்கு ஸ்லாஸ் தோ்வு ஜனவரி 3 அல்லது 4-ஆம் வாரத்தில் நடத்தப்பட உள்ளது.
இந்த தோ்வு கொள்குறி வினாத்தாள் அடிப்படையில் நடைபெறும்.
வினாத்தாளில் 3-ஆம் வகுப்பு 35 கேள்விகள், 5-ஆம் வகுப்புக்கு 45 வினாக்கள், 8-ஆம் வகுப்புக்கு 50 கேள்விகள் இடம்பெறும். இதற்கான அறைக் கண்காணிப்பாளா்களாக கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் 71,019 மாணவா்கள் நியமிக்கப்பட உள்ளனா். இவா்களுக்கு தோ்வுக்கு உரிய முறையான பயிற்சி வழங்கப்பட்டு பணிகளில் ஈடுபடுத்தப்படுவா்.
இதுதவிர தோ்வு கண்காணிப்பு பணிகளில் முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள் கட்டாயம் ஈடுபட வேண்டும். எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் தராமல் வழிகாட்டுதல்களின்படி தோ்வை சிறப்பாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் நடத்தி முடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.