வரி அடுக்குகளில் (Tax slab) மாற்றங்களுடன், நிலையான கழிவு (Standard deduction) வரம்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குடும்ப ஓய்வூதியம் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கான (NPS) ஊழியரின் பங்களிப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
2025ல் ஜனவரி 15ம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு தரப்பட்டுள்ளது. புதிய வரி முறையில் வருமான வரி செலுத்துவோர், முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள் உள்ளன. ஏனெனில் பழைய வருமான வரி விதிப்பை தேர்வு செய்தோருக்கு எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. புதிய முறையை தேர்வு செய்தோருக்குதான் கடந்த பட்ஜெட்டில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
1. வருமான வரி அடுக்கு விகிதங்கள்: புதிய வரி முறையில் வருமான வரி அடுக்குகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ₹3 லட்சம் வரை வருமானத்திற்கு வரி இல்லை. ₹3 லட்சம் முதல் ₹7 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5% வரியும், ₹7 லட்சம் முதல்₹10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10% வரியும் விதிக்கப்படும். ₹10 லட்சம் முதல் ₹12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15% வரியும், ₹12 லட்சம் முதல் ₹15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20% வரியும் விதிக்கப்படும். ₹15 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால், வரி விகிதம் 30% ஆக இருக்கும்.
₹3 லட்சம் வரை - வரி இல்லை
₹3-7 லட்சம் - 5%
₹7-10 லட்சம் - 10%
₹10-12 லட்சம் - 15%
₹12-15 லட்சம் - 20%
₹15 லட்சத்துக்கு மேல் - 30%
2. சம்பளம் பெறும் தனிநபர்களுக்கான நிலையான கழித்தல்: புதிய வரி முறையில், நிலையான கழித்தல் உச்சவரம்பு ₹50,000லிருந்து ₹75,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
3. குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான நிலையான கழித்தல்: குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான நிலையான கழித்தல் வரம்பு ₹15,000லிருந்து ₹25,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
4. தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS): பிரிவு 80CCD(2) இன் கீழ், ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 10% வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. புதிய வரி முறையைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு, இந்த வரம்பு 14% ஆக அதிகமாக உள்ளது.
5. எவ்வளவு வரி சேமிக்க முடியும்? புதிய வரி முறையில், அரசு வருமான வரி அடுக்குகளை மாற்றியமைத்துள்ளது என்பதால் இதை தேர்ந்தெடுக்கும் மக்கள் ஆண்டுக்கு ₹17,500 வரை கூடுதலாக சேமிக்க முடியும்.
₹17,500 சேமிப்பு கணக்கீடு எப்படி தெரியுமா:
₹15,00,000 வருமானம் பெறுகிறார் ஒருவர். எனவே அவர் 30% வரி வரம்பில் வருவார். இதை உதாரணமாக கொண்டு எப்படி சேமிக்கலாம் என்பதற்கான விளக்கம் இதோ.
₹3-6 லட்சம் வருமானத்திற்கு: தற்போதைய வரி ₹15,000, புதிய விகிதம் ₹20,000, இதன் விளைவாக கூடுதலாக ₹5,000 வரி.
₹9-12 லட்சம் வருமானத்திற்கு: தற்போதைய வரி ₹45,000, ஆனால் புதிய ஸ்லாப்களின் கீழ், இது ₹30,000, இதன் விளைவாக ₹15,000 சேமிப்பு.
இரண்டு மாற்றங்களிலிருந்தும் நிகர சேமிப்பு: ₹15,000 - ₹5,000 = ₹10,000.
நிலையான கழித்தல்: கூடுதலாக ₹25,000 கழித்தல் தரப்படுவதால் ₹7,500 சேமிப்பு ஆகும். (₹25,000ல் 30%).
3 மற்றும் 4 படிகளிலிருந்து சேமிப்புகளைச் சேர்த்தால், மொத்த சேமிப்பு ₹17,500 ஆகும்.
இதையெல்லாம் கவனமாக பரிசீலித்து, தங்களுக்கு எது சிறந்த வரி முறை எது என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.