மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தும் 12 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனம் இல்லை. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, March 21, 2025

மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தும் 12 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனம் இல்லை.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் வெளியிட்டு வரும் நிலையில், 11,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருந்தும், 12 ஆண்டுகளாக ஆசிரியர்கள் நியமனம் இல்லாதது தொடக்கக் கல்வியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், மார்ச் 1 முதல், 37,553 அரசு பள்ளிகளில் துவங்கிய மாணவர் சேர்க்கை எதிரொலியாக, 1 லட்சத்து 6,268 மாணவர்கள் புதிதாக சேர்க்கையானதாக கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

மெத்தனம்

வரும் கல்வியாண்டில், ஐந்து லட்சம் மாணவர்களை சேர்க்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு வழங்கும் நலத்திட்டங்கள் அடிப்படையில், பொதுவாகவே கடந்த ஆண்டுகளில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

ஆனால், அதேநேரம் ஆசிரியர்கள் நியமனத்தில் அரசு தொடர்ந்து மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதாவது, தொடக்கக்கல்வித் துறையில் ஒரு லட்சத்து, 12,000 ஆசிரியர்கள் நியமிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது, 93,000 ஆசிரியர்களே பணியில் உள்ளனர். 11,000க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.

இத்துறையில், 2012க்குப் பின் இதுவரை இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

ஆண்டுதோறும், 5,000 பேர் ஓய்வு பெறுகின்றனர். மாணவர்கள் சேர்க்கையை வெளிப்படையாக கொண்டாடும் அரசு, அதற்கேற்ப ஆசிரியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்காதது ஏன்? இதனால், கல்வித்தரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

இதுகுறித்து அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:

ஆசிரியர்கள் நியமனத்தில் மட்டும், அரசு செலவினத்தை கணக்கில் கொள்கிறது. ஆசிரியர்களுக்கான சம்பளத்தை மாணவர்களுக்கான முன்னேற்றத்திற்கான செலவாகவே பார்க்க வேண்டும். அது, நாட்டின் அறிவுசார் முதலீடாகும்.

மடை மாற்றுகின்றனர்

ஆனால், தற்போதைய அதிகாரிகள் இத்துறைக்கு ஒதுக்கப்படும் பெரும்பாலான நிதியை திட்டப் பணிகளுக்கு மடைமாற்றி விடுகின்றனர்.

இதனால், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆசிரியர் பணிக்காக காத்திருந்தாலும், அவர்களை நியமிப்பதில் அரசு ஆர்வம் காட்டவில்லை.

அதேநேரம், பல்வேறு திட்டங்கள் மூலம் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமித்து வருகின்றனர். அரசின் அலட்சியப் போக்கால் லட்சக்கணக்கில் மாணவர்களை சேர்த்தாலும், அரசு பள்ளிகளின் கல்வித்தரம் கேள்விக்குறியாகி விடும்.

இவ்வாறு கூறினர்.


Post Top Ad