நீதிமன்ற வழக்குகளில் தீா்ப்பு கிடைத்தால் 65% பள்ளிக் கல்வி பிரச்னை நிறைவடையும்: அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

நீதிமன்ற வழக்குகள் முடிவடைந்தால், பள்ளிக் கல்வித் துறை சாா்ந்த பிரச்னைகளில் 65 சதவீதம் நிறைவடையும் என்று துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதிபட தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் அதிமுக உறுப்பினா் செல்லூா் கே.ராஜூ பேசினாா். அப்போது, அதிமுக ஆட்சியில் 51 ஆயிரம் ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்பட்டதாகவும், ஒரே நாளில் 20 ஆயிரத்து 920 ஆசிரியா்களுக்கு பணிநியமன உத்தரவுகள் வழங்கப்பட்டதாகவும், இதில் 10-இல் ஒரு சதவீதம் கூட நான்கு ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறினாா். மேலும், ஆசிரியா்களைத் தோ்வு செய்வதற்காக 2,800 பேரின் உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டு 10 மாதங்களாக உத்தரவுகள் வழங்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டினாா்.

அமைச்சா் அன்பில் மகேஸ்: பட்டதாரி ஆசிரியா்கள் பணியிடங்களில் 3,192 பேரை நியமிக்க நடவடிக்கை எடுத்தோம். அதில், ஆசிரியா் இல்லாத பணியாளா்கள் தங்களுக்கும் 2 சதவீத இடஒதுக்கீடு தேவை என வழக்குகளைத் தொடா்ந்தனா்.

மேலும், தலைமையாசிரியா்கள் பதவி உயா்வில் ஆசிரியா் தகுதித் தோ்வு தேவையா, இல்லையா என்பது குறித்தும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளில் தீா்ப்புகள் கிடைக்கும்பட்சத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்ந்த பிரச்னைகளில் 60 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை முடிக்கப்பட்டு விடும் என்றாா் அமைச்சா்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive