ஆராய்ச்சி ஊக்குவிப்பு நிதியுதவி திட்டம்; மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம்: அறிவியல் தொழில்நுட்ப மன்றம் அறிவிப்பு

ஆராய்ச்சி ஊக்குவிப்பு நிதியுதவி திட்டத்தின் கீழ் 1,014 கல்லூரி மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் உறுப்பினர்-செயலர் எஸ்.வின்சென்ட் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம், முதுகலையில் கலை மற்றும் அறிவியல் படிப்புகள் மற்றும் இளங்கலையில் தொழில்முறை படிப்புகள் பயிலும் மாணவர்களை ஆராய்ச்சி மேற்கொள்ள ஊக்குவிக்கும் பொருட்டு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வேளாண்மை, உயிரியல், சுற்றுச்சூழல், மருத்துவம், இயற்பியல், சமூகவியல், கால்நடை மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் , வேதியியல், இயந்திரவியல், கணினி அறிவியல், மின்சாரம், மின்னணுவியல் உள்ளிட்ட துறைகளில் நிதியுதவி அளிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களின் 1,014 சாத்தியமான திட்டங்கள் ஐஐடி, சிஎல்ஆர்ஐ, நியாட் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், இயக்குநர்கள் அடங்கிய நிபுணர் குழுக்கள் வாயிலாக தேர்வுசெய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தேர்வுசெய்யப்பட்ட திட்டங்களுக்கு அரசின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டத்துக்கு அதன் செயல்பாட்டுக்கு அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும்.

ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி ஆய்வுத் திட்டம் முடிவடைந்ததும், அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தால் ஏற்பாடு செய்யப்படும் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நிகழ்வில் மறுஆய்வு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படும். அக்கூட்டத்தில் மாணவர்களால் செய்யப்படும் சாத்தியமான மற்றும் சிறந்த பயனுள்ள திட்டங்களை நிபுணர்கள் அடையாளம் காண்பார்கள். அவ்வாறு அடையாள காணப்படும் திட்டங்கள் அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் காப்புரிமை தகவல் மையம் வாயிலாக தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான காப்புரிமை செய்ய வழிவகுக்கும்.

மாணவர் ஆராய்ச்சி கண்டுபிடிப்பு ஒரு அறிவியல் ஆராய்ச்சி கட்டுரையாக பதிவுசெய்யப்பட்டு, ஐஎஸ்பிஎன் எண்ணுடன் செயல்முறைகளாக வெளியிடப்படும். இது அம்மாணவர்கள் பிற்காலத்தில் முழு அளவிலான விஞ்ஞானியாக உருவாக பேருதவி புரியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive