தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20% முன்னுரிமையில் அரசு வேலை: திருத்தம் செய்து அரசாணை


தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20% முன்னுரிமையில் அரசு வேலை: திருத்தம் செய்து அரசாணை

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு அடிப்படையில், தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசுப் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் நியனம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து அரசு தலைமைச் செயலா் நா.முருகானந்தம் பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் மட்டுமே, 2010-ம் ஆண்டு தமிழ்நாடு தமி்ழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசுப் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் மற்றும் அந்த சட்டத்துக்கான 2020-ம் ஆண்டு திருத்தச் சட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்பட தகுதி உடையவர்கள் ஆவர்.

இதர மொழிகளை பயிற்று மொழியாகக் கொண்டு படித்து தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள், இந்த முன்னுரிமை ஒதுக்கீட்டுக்கு தகுதியுடையவர்கள் கிடையாது. ஒன்றாம் வகுப்பில் பள்ளியில் சேராமல், வயதின் அடிப்படையில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2 முதல் 8 வரையிலான வகுப்புகளில் நேரடியாக பள்ளிகளில் சேர்ந்து தமிழ் மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்டு படித்து தேர்ச்சி பெற்றவர்களும், பிற மாநிலங்களில் தமி்ழ் மொழியைப் பயிற்று மொழியாக் கொண்டு படித்து, பின்னர் தமிழ்நாட்டில் தங்கள் கல்வியை, சேரும் வகுப்பில் இருந்து தொடர்ந்து தமிழ் வழியில் படித்தவர்களும் முன்னுரிமை பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை அவர்கள் படித்த, சம்பந்தப்பட்ட அனைத்துக் கல்வி நிலையங்களில் இருந்தும் தமிழ் வழியில் கல்வி படித்ததற்கான சான்றிதழ் பெற வேண்டும். பள்ளிக் கல்வியாக இருந்தால் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வழங்கும் சான்றிதழ் அடிப்படையிலும், உயர்கல்வியாக இருந்தால் தொழிற்பயிற்சி நிலையம், கல்லூரி, பல்கலைக்கழக முதல்வர், பதிவாளர் வழங்கும் சான்றிதழ்களின் அடிப்படையிலும் முன்னுரிமை அளிக்கப்படும். இந்த சான்றிதழ் பணியில் உள்ள அதிகாரிகளால் மட்டும் அளிக்கப்பட வேண்டும். ஓய்வுபெற்ற அலுவலர்களால் அளிக்கப்படக்கூடாது.

பள்ளிக்கு செல்லாமல் நேரடியாக தனித் தேர்வர்களாக தமி்ழ் வழியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் முன்னுரிமை வழங்கத் தகுதியுடையவர்களாக ஆகமாட்டார்கள். பள்ளிக்குச் சென்று 10, 11, 12-ம் வகுப்பு தேர்வெழுதி, அதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாமல், தனித்தேர்வாக தேர்வு எழுதி அப்பாடங்களில் தேர்ச்சி பெற்று, தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ்வழியில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் முன்னிரிமை பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.

கல்வி தகுதிச் சான்று, மாற்றுச் சான்று, மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றின் மூலம் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் என்பதை சம்பந்தப்பட்ட பணியாளர் தேர்வு முகமைகள், பணி நியமன அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்களால் சமர்ப்பிக்கப்படும் தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அந்தந்த பள்ளி, கல்லூரிகள் மூலம் உறுதி செய்ய வேண்டும்.
பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர்களிடம இருந்தும், கல்லூரிகள் மூடப்பட்டிருந்தால் அக்கல்லூரி ஏற்கெனவே இணைவு பெற்றிருந்த பல்கலைக்கழகப் பதிவாளரிடம் இருந்தும் தமிழ் வழியில் படித்தற்கான சான்றிதழ்களை தேர்வர்கள் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழ் இலக்கியத்தில் கல்வித் தகுதி பெற்றவர்களை மட்டுமே பள்ளி, கல்லூரிகளில் தமிழ் பாடத்திற்கான ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ள 20 சதவீத முன்னுரிமை ஒதுக்கீடானது நேரடி பணி நியமனத்திற்கான ஒவ்வொரு தேர்வு நிலையிலும் (முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் இதரநிலைகள்) பதவி வாரியாகப் பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive