திருநெல்வேலியில் பள்ளி மாணவர் ஒருவர் சக மாணவரை வகுப்பறையில் வைத்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியைஏற்படுத்தியிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நிஜாமுதீன் மகன் ரஹ்மத்துல்லாவும் (14), கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் மகன் இசக்கி முத்துவும் (14) 8ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வழக்கம்போல் இன்று மாணவர்கள் பள்ளிக்கு வந்த போது, மாணவர் இசக்கி முத்து தனது புத்தகப்பையில் மறைத்து வைத்திருந்த சிறிய அரிவாளை எடுத்து ரஹ்மத்துல்லாவை தாக்கியுள்ளான்.
இதனால் ரஹ்மத்துல்லாவுக்கு தலை, வலது கை மற்றும் இடது தோள்பட்டையில் படுகாயம் ஏற்பட்டது.
இந்த தாக்குதலை தடுக்க முயன்ற ஆசிரியர் ரேவதிக்கும் சிறிய அளவில் இடது கையில் காயம் ஏற்பட்டது.
தற்போது காயமடைந்த ரஹ்மத்துல்லாவும், ஆசிரியர் ரேவதியும் அருகில் உள்ள சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம் தலைமையிலான போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணையை தொடங்கினர்.
இது தொடர்பாக உதவி ஆணையர் சுரேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஒரு மாதத்திற்கு முன்பு பென்சில் வாங்குவது தொடர்பாக மாணவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அதனால் இருவரும் ஒரு மாதமாக பேசாமல் இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் தான் ஒரு மாணவன் இன்னொரு மாணவனை தாக்கியிருக்கிறான்.. தற்போது பாதிப்புக்குள்ளான மாணவன் நலமாக இருக்கிறான். நாங்கள் புகாரை பெற்று முதல் கட்ட விசாரணையை நடத்தி வருகிறோம். சிறார்கள் சட்டத்தின் அடிப்படையில் மாணவன் இசக்கிமுத்துவை போலீஸ் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம்” என்றார்.
தனியார் பள்ளிகளில் சோதனைகள் செய்வதில்லையா என்ற கேள்விக்கு, “ரேண்டமாக சோதனை செய்திருக்கிறார்கள். அதனால் இந்த மாணவன் அரிவாள் எடுத்து வந்தது தெரியவில்லை” என்று கூறினார்.
பாதிக்கப்பட்ட ரஹ்மத்துல்லாவின் தாயார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “என் பிள்ளை உயிர் போய்விடுமோ என எனக்கு பயமாக இருக்கிறது. அது என்னுடைய பிள்ளையின் பென்சில்தான், எங்கள் வீட்டில் இருந்துதான் எடுத்துச் சென்றான். இதுகுறித்து நான் மிஸ்ஸிடம் பேசியிருக்கிறேன். நான் பார்த்துக்கொள்கிறேன் என்று மிஸ் சொன்னாங்க. இப்படி வெட்டும் அளவுக்கு எதுவும் செய்யவில்லை” என்று கண்ணீருடன் கூறினார்.
பென்சில் பிரச்சினையால் தான் வெட்டினான் என்று சொல்வதை நம்பமுடியவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர்கள் கூறுகின்றனர்.
இரு மாணவர்களும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் போலீசார் கூடுதல் கவனத்துடன் விசாரித்து வருகின்றனர். nellai school shocking incident.
0 Comments:
Post a Comment