கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதால்தான் தமிழகத்தில் அதிக வளர்ச்சி சாத்தியமானது: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, April 3, 2025

கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதால்தான் தமிழகத்தில் அதிக வளர்ச்சி சாத்தியமானது: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி!

கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால்தான் தமிழகத்தில் அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி தெரிவித்தார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையின் சார்பில் இந்திய கல்வி நினைவு சொற்பொழிவு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் "உயர் கல்வியில் உயர் சமநிலையை எட்டுவது: உள்ளுணர்வுகளும் தீர்வுகளும்" என்ற தலைப்பில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான அசோக் வர்தன் ஷெட்டி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:


சமூக நீதி செயல்பாடு: கடந்த 1961-ம் ஆண்டு இந்தியாவில் தமிழகம் ஏழை மாநிலமாக இருந்தது. தமிழகத்தைவிட பிஹார் முன்னிலையில் இருந்தது. நிதி ஆயோக் அறிக்கையின்படி, கடந்த 60 ஆண்டுகளில் தமிழகம் வளர்ந்த மாநிலமாக முன்னேறியுள்ளது. சமூகநீதி உள்ளிட்டவற்றை செயல்படுத்தியதால் தமிழகம் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது. ஆனால், பிஹார் போன்ற மாநிலங்கள் அவற்றை செயல்படுத்தாததால், இன்னும் அதே இடத்தில் இருக்கின்றன. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் எண்ணிக்கையில் தமிழகம் கடைசி 2-வது இடத்தில் உள்ளது.


2023-ம் ஆண்டு பிஹார் மாநில கணக்கெடுப்பின்படி அம்மாநிலத்தில் அனைவருக்கும் கல்வி கிடைக்கவில்லை. உயர் சாதியினருக்கு மட்டுமே தொழிற்கல்வி கிடைத்திருக்கிறது. அக்கல்வி மற்றவர்களை சென்றடையவில்லை. வளர்ந்த நாடுகளில், அரசுக் கல்வி நிறுவனகளில் மட்டுமே மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால் இந்தியாவில் அரசு கல்வி நிறுவனங்களைவிட தனியார் நிறுவனங்களே அதிகமாக உள்ளன. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் அரசியல்வாதிகளால் நடத்தப்படுகின்றன.


இந்தியாவில் 50 சதவீத மக்களின் ஆண்டு வருமானம் ரூ. 2.4 லட்சத்துக்கும் குறைவு. இவர்களால் எப்படி தரமான கல்வி நிறுவனங்களில் படிக்க இயலும். ஏழை மாணவர்களையும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களையும் கல்வி நிறுவனங்களுக்கு வரவிடாமல் தடுக்கப்படுகின்றனர்.

கல்விக்கு பணம் மறுப்பு கூடாது: கல்விக்கடனுக்கு 8 முதல் 12 சதவீதம் வரை வட்டி, வாகன கடனுக்கும் அதே வட்டிதான். இரண்டும் ஒன்றா, எது முக்கியம். அரசின் கல்வி நிறுவனங்களை மேம்படுத்தாமல் அவற்றை சீர்செய்யாமல் வளர்ச்சி குறித்து பேசக்கூடாது. அதோடு வளர்ச்சியடைந்த நாடுகளுடனும் நம்மை ஒப்பிடவும் கூடாது.

கல்வி நிறுவனங்களுக்கும் காலநிலைக்கு ஏற்றார்போல கூடுதல் நிதி வழங்குவதற்கான பரிந்துரைகளை அரசு வழங்க வேண்டும். கல்விக்கு பணம் இல்லை என்பது தவறு, கல்விக்கு பணம் இல்லை என்று சொன்னால் நாட்டின் வளர்ச்சிக்கு 'குட்-பை' சொல்லிவிடலாம். ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிப்பது குறைவாக இருப்பதாலும், வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் படிக்க வராததாலும் இந்திய கல்வி நிறுவனங்களை தரம் உலக அரங்கில் குறைந்துள்ளது.

மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு போதிய நிதி வராவிட்டாலும்கூட, 1967-க்கு பின்னர் திராவிட ஆட்சி வந்ததுக்குபின், கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. அதனால்தான் தமிழகம் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. உத்தரபிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்கள் மத்திய அரசிடமிருந்து அதிக நிதியை பெற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்காததால் அவை இன்னும் வளர்ச்சி அடையாமல் இருக்கின்றன.

முதல் மூன்று இடத்தில் தமிழகம்: இந்தியாவில் கல்வி குறித்து எந்த அளவுகோலை எடுத்தாலும் அதில் முதல் மூன்று இடத்தில் தமிழகம் இருக்கும். அதற்காக நாம் வளர்ச்சி அடைந்துவிட்டோம் என்ற எண்ணம் அல்ல. சிங்கப்பூர், ஷாங்காய், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுடன் நம்மை ஒப்பிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Post Top Ad