தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28-ல் தொடங்கி நடந்து வருகிறது.
இதேபோல, 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 8-ல் தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்பிறகு, கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு மட்டும் இறுதி பருவத் தேர்வு முன்கூட்டியே ஏப்ரல் 7 முதல் 17-ம் தேதி வரை நடைபெறும் என்று, திருத்தப்பட்ட தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது.
அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கான இறுதி பருவத் தேர்வு இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட தேர்வுகள் நடைபெறுகின்றன. 1, 2, 3-ம் வகுப்புகளுக்கு காலை 10 முதல் 12 மணி வரையும், 4 ,5-ம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் 4 மணி வரையும் தேர்வுகள் நடைபெறும்.
வினாத்தாள் பதிவிறக்கம்: 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் நாளை (ஏப்ரல் 8) தொடங்குகின்றன. 6, 7-ம் வகுப்புகளுக்கு காலை 10 முதல் 12 மணி வரையும், 8, 9-ம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் 4.30 மணி வரையும் தேர்வுகள் நடைபெறும்.
மாநில அளவில் இந்த தேர்வு நடத்தப்படுவதால், எமிஸ் தளத்தில் இருந்து வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து, தேவைக்கேற்ப பிரதிகள் எடுத்து வட்டார கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கோடை விடுமுறை: தேர்வுகள் முடிந்து, 1 முதல் 3-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 12-ம் தேதியும், 4, 5-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதியும், 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 25-ம் தேதியும் கோடை விடுமுறை தொடங்க உள்ளது. எனினும், பள்ளி இறுதி வேலைநாள் வரை ஆசிரியர்கள் பணிக்கு வரவேண்டும். கோடை விடுமுறைக்கு பிறகு, ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment