சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், வரும், 2025 -- 26ம் கல்வியாண்டு முதல், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருவதாக, மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அதிகாரப்பூர்வமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
புதிய பாடத்திட்டமானது, பாடத்தேர்வுகள், பரிந்துரைக்கப்பட்ட கற்பித்தல் நடைமுறைகள் மற்றும் மதிப்பீட்டு முறைகள் போன்றவற்றின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த மாற்றங்கள், தேசிய கல்விக்கொள்கை பரிந்துரைகளை பின்பற்றி, மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
புதிய பாடத்திட்டத்தில், மாணவர்கள், 8ம் வகுப்பு வரை மூன்று மொழிகளை கற்றிருக்க வேண்டும். இதில், ஆங்கிலம், ஹிந்தி போன்ற, 38 மொழிகள் இடம் பெற வேண்டும்.
மூன்றாவது மொழியில், 8ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், 9ம் வகுப்பில் அதே மொழியை தொடர்ந்து படித்து தேர்ச்சி பெறலாம். 9ம் வகுப்பிலும் தேர்ச்சி பெறவில்லை என்றால், 10ம் வகுப்பில் மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். எனினும், மூன்றாவது மொழியில் தேர்ச்சி பெறாதவர்கள், 10ம் வகுப்பு இறுதித் தேர்வுக்கு அனுமதி பெற முடியாது என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது மற்றும், 10ம் வகுப்புகளில், ஆங்கிலம் அல்லது ஹிந்தி ஆகிய மொழிகளில் குறைந்தது ஒன்று கட்டாயமாக தேர்வு செய்யப்பட வேண்டும். மாணவர்கள் விருப்பப்பட்டால், இரண்டு மொழிகளையும் தேர்வு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
கண்காணிப்பு தீவிரம்
கல்வியாளர் அஸ்வின் கூறுகையில், “2023 முதல் மூன்று மொழிகளை, 8ம் வகுப்பு வரை படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தாலும், கடந்த ஆண்டு வரை தமிழகத்தில் சில சி.பி.எஸ்.இ., பள்ளிகள், இதை முழுமையாக பின்பற்றவில்லை. தற்போது இந்த நடைமுறையை கண்காணிக்க, கல்வி வாரியம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம், அனைத்து மாணவர்களும் மூன்று மொழிகளையும், கட்டாயம் கற்றுக்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது,” என்றார்.
0 Comments:
Post a Comment