பத்தாம் வகுப்பு அறிவியல் பொதுத் தேர்வில், கட்டாய வினா எண் 22க்கு, தமிழ் வழியில் விடை எழுத முயற்சித்த அனைவருக்கும், இரண்டு மதிப்பெண்கள் வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, கடந்த மாதம் 28ம் தேதி துவங்கியது. தமிழ் மற்றும் ஆங்கில வழியில் படித்த மாணவர்களுக்கான, அறிவியல் பொதுத் தேர்வு நேற்று நடந்தது.
கட்டாய வினா பகுதியில் கேட்கப்பட்டிருந்த, வினா எண் 22, ஆங்கில வழி வினாத்தாளில், சி.எச்., 4 என, அறிவியல் முறைப்படி தெளிவாக கேட்கப்பட்டு இருந்தது. ஆனால், தமிழ் வழி வினாத்தாளில், 'மீத்தேன்' என மட்டுமே கொடுக்கப்பட்டு இருந்ததாக, மாணவர்கள் குற்றம்சாட்டினர்.
இதனால், தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்கள், வினாவை புரிந்து எழுத முடியாமல், தவறான புரிதலில் மாற்றி பதிலளித்து உள்ளதாகவும், சிலர் சரியாக விடை எழுதியும் மதிப்பெண் குறைந்து விடுமோ என்ற, அச்சத்தில் உள்ளதாகவும், ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
எனவே, கட்டாய வினா எண் 22க்கு, தமிழ் வழியில் விடையளிக்க முயற்சித்த அனைத்து மாணவர்களுக்கும், முழு மதிப்பெண்ணான இரண்டு மதிப்பெண் வழங்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.