தெரு நாய் கடித்து 8ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
ஸ்ரீபெரும்புதூர் அருகே தெரு நாய் கடித்து 8ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடக்குப்பட்டு ஊராட்சி புதிய காலனி பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர். இவருடைய மகன் விஸ்வா (13). அரசு உயர்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இதனிடையே கடந்த 7 ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது விஸ்வாவை நாய் கடித்துள்ளது. இதன் காரணமாக அவரது பெற்றோர்கள் ரெட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் விஷ்வாவிற்கு வயிற்றுவலி மற்றும் தலைவலி ஏற்பட்டதால் பெற்றோர்கள் ஒரகடம் அருகே மாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச்சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விஸ்வா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தெருநாய்களுக்கு உணவு வைப்பதையும், அவற்றின் அதீத பெருக்கத்துக்கு துணையாக இருப்பதையும் சில பணக்காரர்கள் பெருமையாக கருதுகின்றனர். அவர்கள் காரில் செல்வதால் ஏழை எளிய நடுத்தர வர்க்க மக்கள் நடந்தும், இரு சக்கர வாகனங்களிலும் செல்லும் பொழுது, தெரு நாய்களால் துரத்தப்பட்டும், கடிபட்டும் துன்பப் படுவதைக் குறித்து அவர்கள் கவலை கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டினை சமூக ஆர்வலர்கள் எழுப்புகின்றனர்.
ஆகவே, அரசு தெருநாய்களுக்கு உணவு வைப்போரை அவற்றின் பராமரிப்பு செலவுகளை ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தெருநாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment