தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு செல்வதற்கு பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் அதற்கான தகுதித் தேர்வினை எழுதி கண்டிப்பாக தகுதி பெற வேண்டும்.
பின்னர், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டி எழுத்து தேர்வில் பகுதி ஒன்றில் தமிழ் மொழிப் பாடத்தில் 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் தேர்வில் 20 மதிப்பெண் அதாவது 40 சதவீதம் பெற வேண்டும்.
அதேபோல் பகுதி இரண்டில் 150 மதிப்பெண்களுக்கு 40 சதவீதம் அதாவது 60 மதிப்பெண் பெற வேண்டும். பகுதி ஒன்று தமிழ் மொழிப் பாடத்தில் 20 மதிப்பெண் பெற்றால் தான் அந்த தேர்வுக்கான விடைத்தாளின் பகுதி திருத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.
இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டி எழுத்து தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் பகுதி 1 மற்றும் பகுதி 2 தேர்வுகளை எழுதியவர்களின் பெயர், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பதிவு எண், பிறந்த தேதி, மதிப்பெண், தகுதி அல்லது தகுதிப் பெறவில்லை என்ற விபரம் https://trb.tn.gov.in/more_notification_details.php?id=MN-868 என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வு முடிவு தமிழ் மாெழித் தேர்வில் 20 மதிப்பெண் கூட பெற முடியாத சில ஆசிரியர்களின் அவல நிலையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கடந்த 2023-2024 ஆம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த 21.7.2024 அன்று ஒளியியல் குறி அங்கீகாரம் (Optical Mark Recognition (OMR) மூலம் நடத்தப்பட்டது.
இந்த தேர்வில் 25,319 தேர்வர்கள் கலந்துகொண்டனர். போட்டி தேர்வில் கேள்விகளுக்கான தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Answer Key) ஆசிரியர் தேர்வு வாரிய https://trb.tn.gov.in என்ற இணையதளத்தில் 28.3.2025 ஆட்சேபனை தெரிவிக்கும் வசதியுடன் வெளியிடப்பட்டது.
தற்காலிக விடைக்குறிப்பிற்கு 28.3.2025 முதல் 3.4.2025 மாலை 5 மணி வரை தேர்வர்கள் இணையவழியில் தங்களது ஆட்சேபணைகளை (Objections) தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் பெறப்பட்ட அனைத்து ஆட்சேபணைகளையும் பாடவாரியாக வல்லுநர்குழு அமைக்கப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வுக்குப்பின் பாட வல்லுநர்கள் குழுவால் இறுதி செய்யப்பட்ட விடைக்குறிப்புகளின் அடிப்படையில் எழுதிய தேர்வர்களது OMR விடைத்தாளினை கணினி மயமாக்கப்பட்ட மின்னணு செயல்முறை (Computerised electronics process) மூலம் மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன.
அதன்படி தற்பொழுது இந்த தேர்வில் Part B-ல் தமிழ் மொழி வினாக்கள் கொண்ட வினாத்தாளினை எழுதிய அனைத்து தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள், இறுதி விடைக்குறிப்புடன் வெளியிடப்படுகிறது.
மேலும், பாட வல்லுநர்களின் முடிவே இறுதியானது என்று அறிவிக்கப்படுகின்றது. மேற்கொண்டு எந்த ஆட்சேபணைகளையும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்க இயலாது. பாட வல்லுனர்களின் முடிவே இறுதியானதாகும். இவர்களின் சான்றிதழ் சரி பார்ப்பு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.'' என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment